தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூலித் தொழிலாளிகள் இருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
காப்புலிங்கம்பட்டியை சேர்ந்தவர் 50 வயதான முருகன். கூலித் தொழிலாளியான இவர், அதே ஊரைச் சேர்ந்த உறவினரான 40 வயதுடைய மந்திரம் என்பவருடன் மது குடிக்க சென்றுள்ளார். இருவரும், செவ்வாய்க்கிழமை இரவில் தளவாய்புரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிக் கொண்டு, அருகேயுள்ள பாருக்கு சென்றுள்ளனர்.
அங்கு இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த உறவினரான கோமு வந்துள்ளார். அப்போது, தன்னுடைய மனைவி தங்கத்தாய் பிரிந்து சென்றதற்கு நீங்கள் தான் காரணம் எனக் கூறி, மந்திரம் மற்றும் முருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கோமு, தான் மறைத்து வைத்திருந்த பெரிய அரிவாளை எடுத்து வந்துள்ளார்.
கையில் அரிவாள் வைத்திருந்ததை பார்த்ததும் மதுபான கூடத்தில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் ஏதோ சும்மா மிரட்டுவதற்காக கையில் அரிவாளை எடுத்ததாக நினைத்து வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். ஆனால், கோமு ஆக்ரோஷமாக இருந்ததை பார்த்து, சண்டையை விலக்கிவிட முயற்சித்த நபர் ஆபத்தை உணர்ந்து விலகிச் சென்றார்.
தன்னை யாரும் தடுக்காதீர்கள் என்று கூறிக் கொண்டு கோமு, ஆக்ரோஷமாக முருகனின் கைகளில் வெட்டியுள்ளார். அதைப் பார்த்து மத்திரம் விலகியதும், அவரின் தலையில் ஓங்கி பலமாக வெட்டியுள்ளார். அதில் நிலைகுலைந்தவர் அவர் அப்படியே சரிந்து விழுந்தார். மேலும், முருகனை கண்மூடித்தனமாக வெட்டியதும் அவரும் சுருண்டு விழுந்தார். 55 வயதான கோமு, அரிவாளை தூக்குவதற்கு கூட தெம்பு இல்லாத நிலையிலும், இரு கைகளால் பிடித்துக் கொண்டு தொடர்ந்து சரமாரியாக வெட்டியுள்ளார்.
பின்னர், கூட்டம் கூடியதும் கோமு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இருவரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர், முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். மற்றொரு நபரான மந்திரத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், தப்பியோடிய கோமுவை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
முதல் கட்ட விசாரணையில் ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டு, கோமு அண்மையில் வெளியே வந்துள்ளார். சிறையில் இருந்து விடுதலையானவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இருந்தபோதும் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவி மற்றும் மகன் மாடசாமியிடம் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் சில மாதங்களுக்கு முன்பு பெற்ற மகனையே கோமு கத்தியால் குத்த முயன்றுள்ளார். தடுக்க வந்த அவரது மனைவியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. சிறை சென்று வந்தும் கோமு திருந்தாததால், அவரின் மனைவி மற்றும் மகன் இருவரும் விலகி சென்றுள்ளனர். இதில், அவரது மனைவி தங்கத்தாய் ஊரைவிட்டு வெளியேறி வெளியூரில் வசித்து வருவதாக தெரிகிறது.
இதனிடையே, தனது மனைவி கோபித்துக் கொண்டு வெளியூர் சென்றதற்கு உறவினர்களான முருகன் மற்றும் மந்திரம் தான் காரணம் என கோமு நினைத்துள்ளார். அவர்களின் தூண்டுதலின்பேரில் தான் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டதாக கூறி, அடிக்கடி கோமு தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விடாமல் மறைத்து வைத்துவிட்டு, நீங்கள் மட்டும் சரக்கடித்து சந்தோஷமாக இருக்கலாமா என்று கூறி முருகன் மற்றும் மந்திரத்திடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இரட்டைக் கொலைக்கு குடும்ப பிரச்சினை தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மனைவி பிரிந்து சென்றதற்கு உறவினர்களே காரணம் எனக் கூறி, இரு கூலித் தொழிலாளிகைளை மதுக் கூடத்திற்குள் புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் கோவில்பட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version