வருகிற 29, 30-ம் தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்திருப்பதால், தமிழக மக்கள் பீதியில் உள்ளனர்.
வழக்கமாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும். இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரிதும் சிரமத்தை சந்திப்பர். ஆனால் இந்தாண்டு கனமழை போதிய அளவு பெய்யாததுடன் வெயில் அடிக்கத் தொடங்கியது.
எனவே மழைக்காலம் முடிந்து விட்டதாகக் கருதி, மக்கள் நிம்மதியுடன் இருந்தனர். இந்நிலையில், வருகிற 29-ம் தேதி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களுக்கும், 30-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கும் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேலும் பல மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போதே அந்த மாவட்ட மக்கள், அதி கனமழையை நினைத்து பீதியில் உள்ளனர். மழைநீர் தேங்காமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டுமேன தமிழக அரசுக்கு திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.
