அமெரிக்காவில் ஹெச்-1பி விசா குறித்து இப்பொழுது பெரிய விவாதம் நடந்து வருகிறது. இந்த ஹெச்- 1பி விசா திட்டத்தில் நிறைய மோசடி நடப்பதால் தான் டிரம்ப் அவர்கள் அந்த விசாவிற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருந்தார். இந்திய மதிப்பில் ஒரு ஆண்டிற்கான இந்த விசாவின் கட்டணம் 90 லட்சத்திற்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விசாவிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் 2024ல் சுமார் 2.2 லட்சம் H-1B விசாக்களை கையாண்டது. தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு முக்கிய தென் மாநிலங்களுக்கான விண்ணப்பங்களை இந்தத் தூதரகம் தான் கையாண்டு கொண்டு வருகிறது. இதன் மூலம் அதிக உலகில் அதிக H-1B விசாக்களை கையாண்டு வரும் மையமாக இது உருவெடுத்துள்ளது.

சமீபத்தில் நடந்த ஒரு பாட்காஸ்ட் உரையாடலில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் எம்பி மற்றும் பொருளாதார வல்லுநர் டாக்டர் டேவ் பிராட் ஹெச்-1பி விசா திட்டம் தொடர்பாக பல பரபரப்பான விஷயங்களை கூறியிருக்கிறார்.

அவர் கூறிய விஷயங்கள் :

ஒரு நாட்டுக்கு அதிகபட்சமாக 85000 ஹெச் 1பி விசாக்கள் அனுமதிக்கப்படும். அப்படி இருக்க இந்தியாவில் உள்ள சென்னை மாநகரம் மட்டும் கிட்டத்தட்ட 2,20,000 ஹெச் 1பி விசாக்களை பெற்றுள்ளது. ஒரு மாநிலத்துக்கே வெறும் 85 ஆயிரம் என்ற அடிப்படையில் எப்படி ஒரு மாநகரம் கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகமாக விசாக்கள் பெற்றது.

அமெரிக்காவுக்கு வரும் H-1B விசாக்களில் சுமார் 71% இந்தியாவிலிருந்து தான் வருகின்றன. அதேநேரம் சீனாவிலிருந்து வெறும் 12% மட்டும் தான். கண்டிப்பாக இதில் ஏதோ முறைகேடு இருக்கிறது.

மேலும் பேசிய அவர், “திறமையும் திறனும் இருக்கிறது என கூறி இவ்வாறு விசா வாங்கி விட்டு வருபவர்கள் அனைவருக்கும் உண்மையில் உரிய திறமையும் திறனும் இல்லை. இது மிகப்பெரிய மோசடி. இவர்கள் இப்படி வருவதனால் இங்கிருக்கும் அமெரிக்கர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் குற்றம் சாடி உள்ளார்.

முன்னாள் தூதரக அதிகாரியின் பேட்டி:

டாக்டர் டேவ் பிராட் மேற்கூறிய விஷயங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் முன்னாள் தூதரக அதிகாரியின் பேட்டி தற்பொழுது கிடைத்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் அமெரிக்க வெளியுறவு சேவை அதிகாரியும் தற்போதைய அமெரிக்க அறிவியல் தூதருமான மஹ்வாஷ் சித்திக் கொடுத்த பேட்டி,

“2005 முதல் 2007 வரை நான் விசாரித்த சுமார் 51,000 H-1B விசாக்களில், 80 முதல் 90 சதவீதம் போலியானவை தான். போலியான பட்டங்கள், ஆவணங்கள் அல்லது திறமையற்ற விண்ணப்பதாரர்கள் தான் நான் அதிக அளவில் பார்த்தேன்.

குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட் என்ற பகுதியில் உள்ள பயிற்சி மையங்கள் விசா விண்ணப்பதாரர்களுக்கு வெளிப்படையாகப் பயிற்சி அளித்ததுடன், போலியான வேலைவாய்ப்புக் கடிதங்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் திருமணச் சான்றிதழ்களைக் கூட விற்று வந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மோசடிகளைக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வர அதிகாரிகள் முயற்சி செய்தபோது, பல தரப்பிலிருந்தும் குறிப்பிடத்தக்க அரசியல் அழுத்தம் வந்தது. இவர்களின் மோசடி தடுப்பு முயற்சி உள்ளுக்குள்ளேயே சட்டவிரோத நடவடிக்கை என்று முத்திரை குத்தப்பட்டது என்றும் மேலும் இது சம்பந்தமாக விசாரணையைத் தொடர வேண்டாம் என்று தங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இறுதியில் அவர் இந்தியாவில் லஞ்சம் மற்றும் ஊழல் சாதாரணமாகி விட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version