‘2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியானது திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில்தான்’. ஆரம்பத்தில் அவ்வளவு உரக்கச் சொல்லாத இந்த வார்த்தைகளை தற்போது சத்தமாகவே சொல்லத் தொடங்கியிருக்கிறார், தவெக தலைவர் விஜய்.
ஒருபுறம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து எந்த எதிர்மறை விமர்சனங்களையும் வைப்பதில்லை, மறுபுறம் அதே இருவரால் வலுவான ஓட்டு வங்கியுடைய கட்சியாக வளர்த்தெடுக்கப்பட்ட, இன்றும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அந்தக் கட்சியைப் பொருட்படுத்தாதது போல் காட்டிக்கொள்கிறார். இருப்பினும் திமுகவை தொடர்ந்து விமர்சித்து பேசுவதன் மூலம், “திமுகவின் எதிரி மற்றும் அதிமுகவுக்கு மாற்று ‘தவெக’ தான்” என நிறுவ விஜய் முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் விஜய்க்கு மறைமுகமாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் திமுகவுக்கு எதிரான பலம் வாய்ந்த போட்டியாளர்கள் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீண்டகாலமாக பிரதான போட்டியாளராக இருந்த அதிமுக பலவீனமாக இருந்தாலும் தற்போது வரை அதிமுகவையே பிரதான எதிர்க்கட்சியாக பார்ப்பதாக தெரிவித்த உதயநிதி, பாஜக மற்றும் அதன் பி டீம்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார்.

