கோவையில், சாமியார் வேடமணிந்து தொழிலதிபர்களை மிரட்டியும், அலுவலகங்களில் புகுந்து பணத்தைத் திருடியும் வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மர்மக் கும்பலை பொதுமக்களால் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் சாமியார் வேடமணிந்து உலா வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மர்மக் கும்பல் ஒன்று, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதையும், நிறுவனங்களில் புகுந்து திருடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தது. வெங்கிட்டாபுரம் பகுதியில் இயங்கிவரும் ஹாலோ பிளாக் நிறுவனத்திற்குள் சாமியார் போல் நுழைந்த அந்த நபர்கள், அலுவலகத்தில் ஆள் இல்லாத நேரத்தைப் பார்த்து மேஜையில் இருந்த ஐயாயிரம் ரூபாய்  பணத்தைத் திருடிக்கொண்டு தப்பியோடினர்.

வேலை முடிந்து அலுவலகத்திற்கு வந்து பார்த்த உரிமையாளர் பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்து, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது சாமியார் உடையில் வந்தவர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்ததும், உடனடியாக அந்த வீடியோ ஆதாரத்தை உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து அனைவரையும் உஷார்படுத்தியதுடன் நீலாம்பூர் காவல் நிலையத்திலும் புகாரளித்தார்.

இதற்கிடையில், அன்னூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த உள்ளூர்வாசி ஒருவர், வாட்ஸ்அப் குழுவில் எச்சரிக்கப்பட்ட அதே கார் தனக்கு முன்னால் செல்வதைக்கண்டு உடனடியாக உஷாரானார். தன் நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்து சினிமா பாணியில் அந்த காரைப் பின்தொடர்ந்து சென்ற அவர்கள், கருமத்தம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் வைத்து அந்தச் சாமியார் கும்பலை அதிரடியாக மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். எலுமிச்சம்பழத்தை காட்டிப் பயமுறுத்தி மோசடி செய்து வந்த இந்தக் கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version