திருப்பரங்குன்றம் மலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்படும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற, வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று காலை மலை உச்சியில் அதற்கான ஏற்பாடுகளை செய்த கோயில் நிர்வாகம் திடீரென ரத்து செய்தது.

இதனை கண்டித்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா, தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவு ரத்து செய்து ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மனுதாரர் திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும். காவல் ஆணையர் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும் உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை காலை 10:30 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட இந்து அமைப்பினர் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தடையை மீறி திருப்பரங்குன்றத்தில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version