சென்னையில் பிட்புல், ராட்வீலர் வகை நாய்களை வாங்கி வளர்ப்பவர்களுக்கு இன்று முதல் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான தீர்மான்தை சென்னை மாநகராட்சி நேற்று நிறைவேற்றிய நிலையில், இன்று முதல் அது அமலுக்கு வந்துள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சமீபகாலமாக நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பள்ளி செல்லும் சிறார்கள், வீட்டின் முன்பு விளையாடும் குழந்தைகள் ஆகியோர் இந்த நாய்க்கடி சம்பவங்களால் அதிகம் பாதிக்கப்படுவர்களாக உள்ளனர்.
நாய்க்கடிக்கு உள்ளாகி ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பிட்புல், ராட்வீலர் நாய்கள் இன்னும் மோசமான பாதிப்புகளை உருவாக்குகின்றன.
இந்த நாய்கள் மிக மூர்க்கத்தனமாக தாக்கும் குணம் உடையவை. தன்னை வளர்க்கும் உரிமையாளரை தவிர, மற்ற யாரையும் தாக்க இந்த நாய்கள் தயங்காது. மேலும், இந்த நாய்களுக்கு கடிக்கும் ஆற்றல் (Bite Force) மிக அதிகம் என்பதால், இவற்றால் தாக்கப்படுவோர் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள். சில சமயங்களில் மரணம் கூட நேரிடும்.
கடந்த ஆண்டு கூட, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஒரு சிறுமியை ராட்வீலர் கடித்ததில், அவரது மண்டை ஓடே பெயர்ந்து வந்தது. அதேபோல, பிட்புல் நாய் தாக்கி பலர் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவை இரண்டுமே வெளிநாட்டு நாய்கள் என்பதோடு, மிக ஆபத்தான நாய்களை கலப்பினம் செய்ய வைத்து உருவாக்கப்படும் இனங்கள் ஆகும்.
இவை வீட்டில் வளர்க்கப்படும் நாய் இனங்கள் என்பதால், தெருநாய்களை கட்டுப்படுத்துவதை போல ராட்வீலர், பிட்புல் நாய்களை கட்டுப்படுத்த இயலாது. எனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த இரண்டு இன நாய்களை வளர்க்க தடை விதித்து மாநகராட்சி கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே, இனி சென்னையில் யாரும் இந்த வகை நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க முடியாது. ஏற்கனவே வளர்க்கும் நாய்களாக இருந்தால் அதற்கு கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் மேலும், அவற்றை வெளியே கொண்டு வரும் போது கட்டாயம் வாய் கவசம் போட்டிருக்க வேண்டும்.
மேலும், புதிதாக பிட்புல், ராட்வீலர் நாய்களை வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் (டிச.20) அமலுக்கு வந்துள்ளது. இதுதவிர, இந்த வகை நாய்களுக்கு உரிமம் பெறவும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
