டித்வா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக தூத்துக்குடியில் 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘டித்வா’ (Ditwah) புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த புயல் வருகிற 30ஆம் தேதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் – புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த புயல் காரணமாக, வருகிற 30 ஆம் தேதி வரை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், 5-வது நாளாக இன்று விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால், சுமார் 3,000-க்கு மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழையால் மீன் விற்பனை நடைபெறாததால், துறைமுகங்களில் மக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து, துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களுக்கு புயல் தொடர்பாக அறிவிக்கும் வகையில், கடந்த சில நாட்களாக 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு முதல் தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் மிதமான மழை பரவலாக பெய்து வருவதால், ஆபத்து ஏற்படுத்தக்கூடிய மோசமான வானிலையை உணர்த்தும் வகையில், வஉசி துறைமுகத்தில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையிலும், மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கவில்லை. இதனால், மழையில் நனைந்தபடியே குடையை பிடித்துக்கொண்டு மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றனர்.
