ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய தொழில் நகரமான ஹாங்காங், பல லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நெருக்கடி மிகுந்த நகரமாக இருந்து வருகிறது. இந்நகரத்தின் தாய் போ மாவட்டத்தில் உள்ள, வாங் ஃபக் கோர்ட் எனும் அடுக்குமாடி குடியிருப்புகள், எட்டு கோபுரத் தொகுப்புகளுடன் 31 மாடிகள் உயரம் கொண்டதாக இருக்கிறது.

இந்த குடியிருப்பில் கடந்த புதன்கிழமை (நவம்பர் 26) மூங்கிலால் சாரம் அமைத்து, தொழிலாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, நண்பகல் நேரம் சுமார் 2:51 மணியளவில் எதிர்பாரா விதமாக ஒரு குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டு, அது வேகமாக பக்கத்தில் உள்ள மற்ற மாடிகளுக்கும் பரவியது.

இவ்விபத்தில், நேற்றைய தினம் சுமார் 65 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94-ஆக அதிகரித்துள்ளது என தாய் போ மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மூன்றாவது நாளாக தீயின் பிடியில் சிக்கியுள்ள 250-க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

தீ விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான் நிலையில், 40-க்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக ஹாங்காங் தலைவர் ஜான் லீ தெரிவித்துள்ளார்.

கடந்த 80 ஆண்டுகளில், ஹாங்காங் சந்தித்த மிக மோசமான விபத்தாக கருதப்படும் இந்த அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில், தீயை அணைக்க போராடிய தீயணைப்புத்துறை வீரர் ஒருவரும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், 11 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

வாங் ஃபக் கோர்ட் குடியிருப்புகளில் ஏற்பட்ட தீயை அணைக்க சுமார் 1,000 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தீயணைப்புத்துறையின் துணை இயக்குநர் டெரெக் ஆம்ஸ்ட்ராங் சான் கூறியுள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் காரணமாகத் தான், இந்த தீ விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவர் மற்றும் ஒரு பொறியியல் ஆலோசகர் என மூன்று பேர், கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் எய்லீன் சுங் தெரிவித்துள்ளார்.

எட்டு தொகுப்புகளைக் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு தொகுப்பு மட்டுமே தீக்கிரையாகாமல் தப்பித்துள்ளது. மொத்தம் 2,000 வீடுகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில், சுமார் 4,800 மக்கள் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 1980-இல் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சீரமைப்பு பணியில் ஏதேனும் ஊழல் நடந்திருக்கிறதாக என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஹாங்காங் ஊழல் தடுப்பு அமைப்பும் இந்த தீ விபத்து தொடர்பாக தனியாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த தீ விபத்தில், தப்பித்து வெளியே ஓடிவந்து உயிர் பிழைத்தவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை எதிர்பார்த்து குடியிருப்புப் பகுதியின் அருகே காத்திருக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக நவம்பர் 1962-இல், ஷாம் ஷுய் போ மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 44 பேர் இறந்ததும், 1996-இல் கவுலூனில் உள்ள கார்லே எனும் வணிகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததும் ஹாங்காங்கில் பகுதியில் ஏற்பட்ட பெரிய விபத்தாக இருந்து வந்தது. அந்தவகையில், வாங் ஃபக் கோர்ட் சம்பவம், ஹாங்காங் நகரத்தில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தாக தற்போது பதிவாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version