14வது உலகக் கோப்பை ஆடவர் இளையோர் ஹாக்கிப் போட்டி மதுரையில் இன்று கோலாகலமாக தொடங்கியது.

கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக ஆடவர் இளையோர் ஹாக்கிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, போலந்து, மலேசியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக ஜெர்மனி ஏழுமுறை உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்தியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் தலா இரண்டு முறை கோப்பைகளை கைப்பற்றி உள்ளன.

இந்த ஆண்டு ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டியானது தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2001ஆம் ஆண்டு சென்னையில் 7வது உலக ஆடவர் இளையோர் ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்றன. அதில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் வென்று இந்தியா முதன்முறையாக கோப்பையை வென்றது. அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் பெல்ஜியத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

தற்போது மூன்றாவது முறையாக 14-வது உலக இளையோர் ஆடவர் ஹாக்கிப் போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கேட்க மதுரை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் ஏ.ஜி கண்ணனை, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டது. அப்போது பேசிய கண்ணன், “உலக ஆடவர் இளையோர் ஹாக்கி அணிகளின் தரப்பட்டியலில் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. நமது ஹாக்கி அணி தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நிலையில், மூன்றாவது முறையாக தற்போது கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

அதுமட்டுமன்றி, சென்னைக்கு அடுத்தபடியாக முதல் முறையாக உலகக் கோப்பை போட்டிகள் மதுரையில் நடைபெறுகிறது. குறிப்பாக தென் மாவட்ட இளைஞர்களின் ஆர்வத்தை ஹாக்கிப் போட்டிகளின்மீது ஈர்க்க இதை ஒரு நல்ல வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம். வருங்காலத்தில் சர்வதேச அளவிலான ஹாக்கிப் போட்டிகளை நடத்த இடங்களை தேர்ந்தெடுக்கும்போது மதுரையில் அந்த வரிசையில் இடம்பெறும் வகையில் பன்னாட்டு தரத்திற்கு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version