தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு வார கால தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு முக்கிய குற்றவாளியான முனீஸ்வரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடந்த 10ம் தேதி 12ம் வகுப்பு  மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.  மேலும் அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் தெரியவந்ததையடுத்து குற்றவாளியை கைது செய்யக்கோரி மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கில், 10 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், முக்கிய குற்றவாளியான முனீஸ்வரனை போலீஸார் இன்று கைது செய்தனர். மாணவியைக் கொலை செய்ததற்கான காரணம் மற்றும் கொலை செய்த விதம் குறித்து அவரிடமிருந்து ரகசிய வாக்குமூலத்தையும் போலீஸார் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் முனீஸ்வரனை  பிடிக்க போலீஸாருக்கு உதவியது மாணவியின் நகங்களுக்குள் இருந்த சதைத் துணுக்குகள்தான். உயிருக்குப் போராடிய தருணத்தில் மாணவி தன்னைத் தற்காத்துக் கொள்ள கொலையாளியை நகங்களால் பிறாண்டியுள்ளார். இதில் கொலையாளியின் உடலில் ஏற்பட்ட காயங்களும், மாணவியின் நகத்தில் சிக்கியிருந்த அவனது சதைத் துணுக்குகளும் முக்கியத் தடயங்களாக மாறின. இந்தச் சதைத் துணுக்குகளை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியதில், அது முனீஸ்வரனின் ரத்த மாதிரியுடன் ஒத்துப்போனது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பதால், போலீஸார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி அனைத்து ஆதாரங்களையும் திரட்டினர்.  தற்போது கைது நடவடிக்கை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version