தூத்துக்குடி தெற்கு அதிமுக பகுதிச் செயலாளர் S.P.S ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தெற்கு பகுதிக் கழகச் செயலளர் S.P.S.ராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என கேட்டுக் கொள்வதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் தான் இந்த ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.17 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் ராஜா மற்றும் அவரது தந்தை ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மலேசிய தப்பி செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.