தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கும் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் இன்று ஒரே நாளில் மூன்று முக்கியச் சிக்கல்கள் முளைத்துள்ளன. திமுக கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான விசிக, தேமுதிக மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் திருப்தி அளிக்காததால், இன்று அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறைந்தபட்சம் 10 முதல் 12 தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில், திமுக தரப்பு 8 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்துள்ள விசிக தலைமை, இன்று தனது கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில், திமுகவின் ஆஃபரை ஏற்பதா அல்லது அடுத்தகட்டமாகக் கூடுதல் இடங்களுக்காக அழுத்தம் கொடுப்பதா என்பது குறித்துத் திருமாவளவன் ஆலோசித்து வருகிறார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் அடங்கும். 2 தனித் தொகுதி, 2 பொதுத் தொகுதி என நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், சமீபத்தில் திமுக கூட்டணிக்கு வந்த தேமுதிக, இரட்டை இலக்கத் தொகுதிகளைக் குறிவைக்கிறது. ஆனால், அவர்களுக்கு ஒற்றை இலக்கத்திலேயே இடங்களை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதால், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அவசரமாகக் கூடி விவாதிக்கிறது. அதேபோல், கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPM), இந்த முறை 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுத்துள்ள சிபிஎம் மாநிலக் குழு, இன்று தனது கட்சி அலுவலகத்தில் இறுதி முடிவை எடுக்கக் கூடி விவாதித்து வருகிறது.

வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏற்கனவே கூட்டணியை விட்டு வெளியேறியுள்ள நிலையில், தற்போது விசிக, தேமுதிக மற்றும் இடதுசாரிகளும் அதிருப்தியில் இருப்பது திமுக தலைமைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே 28 இடங்களை வாரி வழங்கியதே இந்தச் சிக்கல்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படுத்தி இன்று மாலைக்குள் ஒரு சுமூக முடிவுக்கு வர திமுக மேலிடம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version