ரூ.300 கோடியில் புனரமைக்கப்பட்ட திருச்செந்தூர் முருகன் கோயிலில் பழமையான கல் மண்டபத்தில் மழைநீர் கசிந்து வருவதால் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டதிலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் நிலையில் இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியும், அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பெருந்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவக்கி வைத்தார். இதில் கோயில் மண்டபம், அன்னதானக்கூடம், தங்கும் விடுதிகள், நாழிக்கிணறு, திருமண மண்டபம் மற்றும் பூங்கா என, பல்வேறு பணி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் கோயிலுள்ள பழமையான ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம், வெள்ளக்கல் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பழமையான கல்மண்பங்கள், அதன் பழமை மாறாமல் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கோயில் சண்முக விலாஸ் மண்டபம் முன் உள்ள பழமையான வெள்ளக்கல் மண்டபத்தில் மழைநீர் கசிந்து ஒழுகுவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளக்கல் மண்டபத்தில் மேல்தளங்கள் மற்றும் கல்தூண்கள் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் இந்த வெள்ளக்கல் மண்டபத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் கசிந்து ஒழுகி வருகிறது. இதனால் மண்டபத்திற்குள் மழைநீர் ஓடுவதால் காத்திருக்கும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இக்கோயிலில் புதிய பணிகளுடன் ரூ.300 கோடி மதிப்பில் பழமையான கல் மண்டபங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் மண்டபத்தில் மழை நீர் கசிவு ஏற்பட்டிருப்பது, பக்தர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழ்நாடு அரசும், அறநிலையத்துறையும் கூடுதல் கவனம் கொண்டு கல்மண்டத்தை மறுசீரமைப்பு செய்யவும், மீதமுள்ள பணிகளை தரமாக கட்டவும் வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
