நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை பெரும் பிழை செய்துள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை, சத்தியமூர்த்தி பவனில் மறைந்த முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் 78 ஆவது பிறந்த நாளையொட்டி அவரின் திருவுருவப்படத்திற்கு‌ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ப.சிதம்பரம் கூறியதாவது, “நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு. நீதிபதி சிறந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார். இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெறவில்லை. காவல்துறை வழக்குப் பதிவு செய்து குற்றச்சாட்டு வைக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் காவல்துறை அல்லது புலனாய்வு துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.

முதல் தகவலறிக்கை இல்லாமல் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்வது சட்ட விரோதம். இது எப்ஐஆர் அல்ல. தனிப்பட்ட குற்றச்சாட்டு. 8 ஆண்டுகள் கழித்து கடந்த 2021ம் ஆண்டு அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் 4 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறை பெரும் பிழையை செய்துள்ளது.

ஒரு ரூபாய் கூட பணப் பரிமாற்றம் செய்யாத நிலையில், எப்படி சட்ட விரோதமாக பதிவு செய்யப்பட்டது? ஒன்றிய அரசு இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. மேல்முறையீடு செய்ததாக தகவல் இல்லை. செய்யலாம் என தகவல் பரவுகிறது. செய்யட்டும், அப்படியானால் புத்தி தெளியவில்லை என அர்த்தம். அமலாக்கத்துறை பாஜக ஆளாத மாநிலங்களில் கவனம் செலுத்துகிறது” என்றார்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட விவகாரத்தில் 2 ஆவது முறையாக மகாத்மா காந்தியை கொன்றிருக்கிறார்கள். ஹிந்தி சொற்களை ஆங்கிலத்தில் எழுதினால் அது ஆங்கிலம் ஆகிவிடாது. அதற்கு மாற்று பெயர் இந்தியும் இல்லை. ஆங்கிலமும் இல்லை. ஹிந்தி சொற்களை ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்கள். இந்த வார்த்தைகள் அமைச்சர்களுக்கே புரியவில்லை. மகாத்மா காந்தியை விட இந்த திட்டத்திற்கு பொருத்தமான பெயரா இது. வேலை பார்ப்பவர்களில் மொத்த ஊதியத்திற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும். கடந்த 2004 ஆம் ஆண்டு திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்தபோது காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களுடன் திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிறகு 2004 -2005 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அனைவரையும் கலந்தாலோசித்து தான் தான் இந்த வரைவு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்தில் குறை இருந்தால் அதில் நிறைவு செய்வது எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. அந்தத் திட்டத்தை ரத்து செய்து வாயில் நுழையாத பெயர்களை சொல்கிறார்கள். நாங்கள் அப்போது திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தினோம்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது தான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம். தற்போதைய சட்டம் நாடு முழுவதும் அமலாகப் போவதில்லை. மத்திய அரசு எந்த மாவட்டங்களில், எந்த பகுதிகளை குறிப்பிடுகிறதோ அங்கு தான் இந்த திட்டம் அமலாகும். வருடத்தில் 60 நாட்கள் திட்டத்தை அமலாக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. எந்த 60 நாட்கள் அவை என கூறப்படவில்லை. குறிப்பிட்ட மாவட்டத்திற்கு வேலை இல்லை என்று சொல்லிவிட்டால் வேலை கேட்கவே முடியாத நிலை இந்த சட்டத்தில் உள்ளது.

பல விபரீத குறைபாடுகள் புதிய சட்டத்தில் உள்ளது. இது உத்திரவாதம் கிடையாது. உத்திரவாதம் இல்லாத திட்டம். தற்போது வரை எட்டு கோடி பேருக்கு வேலை அட்டை உள்ளது. இதில் பாதிக்கப்படுவது பரம ஏழைகள் தான். காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது தற்போது பொருளாதார வளர்ச்சி குறைவு தான். விபி ஜி ராம்ஜி என்பது இந்தி வார்த்தையின் ஆங்கில சொற்கள். இதை எதற்காக வைத்தார்கள்? என்று தெரியவில்லை. இந்த சட்டம் ரத்தாகும் வரை எங்கள் போராட்டம் தொடரும். வீடு வீடாக மக்களிடையே கொண்டு சேர்ப்போம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version