’சம வேலைக்கு சம ஊதியம்’ உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, இன்று 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 ஆம் தேதி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் தங்களது உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். இதுதொடர்பாக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற செவிலியர்களை கைது செய்த போலீசார், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.

தொடர்ந்து, அன்றிரவு, பேருந்து நிலையத்திலேயே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், செவிலியர்களை இரவோடு இரவாக கைது செய்த போலீசார், ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து, டிச.19 ஆம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், போராட்டம் தீவிரமடைந்தது.

மேலும், சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு வர முடியாத செவிலியர்கள் தங்கள் மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்ததால், தமிழ்நாடு முழுவதும் தற்போது போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், கூடுவாஞ்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்களின் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் போது, அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தக் கோரியும், அரசுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

செவிலியர்களின் கோரிக்கைகள்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் மீதான மேல் முறையீட்டை கைவிட்டு செவிலியர்களுக்கு ’சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும். கரோனா காலகட்டத்தில் பணி செய்து, பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.

செவிலியர்களுக்கு 7,14,20 மற்றும் 25 ஆண்டுகளில் பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் உருவாக்கிட வேண்டும். எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு. கருவூலம் மூலம் ஊதியம் பெறும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18,000 ஊதியம் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர செவிலியர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version