கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14-ந்தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) தேரோட்டமும் நடைபெறுகிறது.

கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருநங்கைகள் ஆயிரக்கணக்கானோர், கூவாகம் கிராமத்திற்கும், விழுப்புரம் நகருக்கும் வருகை தந்துள்ளனர்.

இவர்களுக்காக, திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து மிஸ் கூவாகம் நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, தூத்துக்குடி, நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி, விருதுநகர், தேனி, புதுச்சேரி, பெங்களூரு, மைசூர், மலேசியா, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

அழகிப் போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 25 பேர் 2-ம் சுற் றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும், மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். அவர்களில் 15 பேர், இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 2-வது சுற்று அழகிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 பேரும் மீண்டும் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

தமிழ் கலாசாரம், நடை, உடை, பாவனை ஆகியவற்றின் அடிப்படையில் நடந்த இந்த சுற்றின் முடிவில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் மிஸ் கூவாகமாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக இவர்கள் 7 பேருக்கும் பொது அறிவுத்திறன் குறித்தும். எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் அளித்த கோவையை சேர்ந்த சூர்யாகுட்டி மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். மலேசியாவை சேர்ந்த நிஷா 2-ம் இடத்தையும், புதுச்சேரியை சேர்ந்த அனன்யா 3-ம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.11 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் முத்தமிட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version