பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஷம்பு-அம்பாலா ரயில் தடத்தில், திங்கள்கிழமை இரவு பயங்கர குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்தது. சரக்கு ரயில்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்தத் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைக்க முயன்ற நபர், எதிர்பாராதவிதமாக அது வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். சுமார் இரவு 10 மணியளவில் நடந்த இந்த வெடிப்புச் சம்பவத்தால் ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாட்டியாலா எஸ்.எஸ்.பி வருண் சர்மா மற்றும் டி.ஐ.ஜி தலைமையிலான உயர்மட்ட போலீஸ் குழுவினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிகுண்டு வெடித்த வேகத்தில் அந்த நபரின் உடல் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து ஒரு சிம் கார்டு மற்றும் சில தடயங்களைச் சேகரித்துள்ள தடயவியல் நிபுணர்கள், தொழில்நுட்ப ரீதியான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் சிர்ஹிந்த் பகுதியில் இதே போன்றதொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் சில தடை செய்யப்பட்ட இயக்கங்கள் இதற்குப் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல்கள் பரவினாலும், காவல்துறை அதனை உறுதிப்படுத்தவில்லை. இந்தச் சதித் திட்டத்தின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய ஜி.ஆர்.பி மற்றும் ஆர்.பி.எஃப் வீரர்களுடன் இணைந்து தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
