தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்  ஆ. விஜய் தமிழன் பார்த்திபன்  தலைமையில் இன்று (26.05.2026) போக்குவரத்துத் துறையின் முக்கிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் பல்வேறு முக்கிய முடிவுகள் ஆலோசிக்கப்பட்டன.

வாகன எண் முன்பதிவு: இனி ஆன்லைன் ஏலம்!
பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான வாகனப் பதிவு எண்களைப் பெறுவதில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் நோக்கில், பொது ஏல முறையைச் செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் எண்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பங்கேற்க வழிவகை செய்யப்படும்.

ஆட்டோ கட்டண நிர்ணயம்: விரைவில் கலந்தாய்வு
தமிழ்நாட்டில் இயங்கும் ஆட்டோ ரிக்சாக்களின் கட்டணத்தை முறைப்படுத்துவது தொடர்பாகப் பல கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய கலந்தாய்வுக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் என இருதரப்பு நலன்களும் இதில் கருத்தில் கொள்ளப்படும்.

பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு (AIS-140 VLTD திட்டம்)
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வாகன இருப்பிடக் கண்காணிப்பு சாதனம் (VLTD) பொருத்தும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
அப்போது வாகனங்களை நிகழ்நேரத்தில் (Real-time) கண்காணித்தல் மற்றும் அவசர காலங்களில் விரைந்து உதவி செய்வது குறித்தும்,  லாரி மற்றும் பள்ளி வாகன உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், இந்தச் சாதனங்களின் விலை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு
விபத்துகளைக் குறைப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளைத் தீவிரமாக அமல்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் போக்குவரத்து ஆணையர்  பாஸ்கர பாண்டியன், கூடுதல் ஆணையர்  சிவகுமரன், மற்றும் இணைப் போக்குவரத்து ஆணையர் பொன். செந்தில்நாதன் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

“பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படையான நிர்வாகமே எங்களின் முதன்மை இலக்கு” என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version