திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் கடந்த 25-ம் தேதி அதிகாலை இந்து முன்னணி வடக்கு ஒன்றிய தலைவர் பாலமுருகன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி முன்னாள் நிர்வாகி சுமன் மற்றும் அவரது நண்பர் தமிழரசன் ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் நரசிம்மப் பிரவீன் மற்றும் அஸ்வின் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், தலைமறைவாக உள்ள இருவருக்கும் சம்பவத்தன்று தமிழரசன் இருசக்கர வாகனம் கொடுத்து உதவியுள்ளார். மேலும் சுமன், அஸ்வின் இடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தலைமறைவாக உள்ள இருவரும் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சுமன் தமிழரசன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள நரசிம்ம பிரவீன், அஸ்வின் ஆகியோரை தேடி வருவதாகவும் அவர்கள் இருவரையும் கைது செய்த பின்னரே கொலைகாண முழு விவரங்கள் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.