சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் ஒருங்கிணைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தோழர் நல்லகண்ணு அவர்களின் மார்பளவு திருவுருவ சிலை திறப்பு மற்றும் “அம்மாச்சி – கற்பனையின் முதல் ஆசிரியர்” புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது…

தோழர் நல்லகண்ணுக்கு முதன்முதலாக திறக்கப்பட்டுள்ள சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி.

திணைநிலவாசிகள் அமைப்பை சேர்ந்தவர் எழுதிய நூலை வெளியிட்டுள்ளோம்.

நல்லகண்ணுக்கு சிலை வைத்ததன் மூலம் இந்த சமூகம் யாரை கொண்டாட வேண்டும் என இந்த நிகழ்ச்சி மூலம் அமைப்பினர் வெளிப்படுத்தியுள்ளனர்

மக்களுக்கான களப்போராளிகளை கொண்டாடுவதை விட இன்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் போராளிகளையே அதிகம் கொண்டாடுகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் உடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் குதிரை பேரம் நடைபெருகிறதா என்று கேட்டனர். வந்திருக்கும் உங்களுக்கு தெரியும் குதிரை பேரம் எங்கு நடைபெறும் என்று.

நீட் எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டிற்கு புதிதல்ல. நீட் வந்தது முதல் திமுக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி உண்ணாவிரதம், கையெழுத்து இயக்கம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக 80லட்சம் கையெழுத்துகளை பெற்றோம்.

2021 திமுக அரசு அமைந்த உடன் நீட் பாதிப்பை கண்டறிய ஓய்வு பெற்ற நீதி அரசர் ஏகே ராஜன் தலைமையில் எங்கள் தலைவர் ஒரு குழு கமிட்டியை அமைத்தார்.

அந்த கமிட்டி தமிழ்நாடு முழுவதும் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களை சந்தித்து ஒரு பரிந்துரையை அரசுக்கு கொடுத்தார்கள்.

அந்த பரிந்துரையின் அடிப்படையில் நீட் விலக்கு வேண்டுமென அப்போதைய முதலமைச்சர் சட்ட முன் வடிவை கொண்டு வந்தார். அதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்கவில்லை. உடனே முதலமைச்சர் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய இயக்கம் தான் திமுக.

நீட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான தொடக்கமாக தான் டெல்லியில் நடந்த போராட்டத்தை நான் பார்க்கிறேன்.

ஐயா நல்லகண்ணு இப்போது இருந்திருந்தால் நிச்சயம் அவரும் இதைதான் சொல்லி இருப்பார்.

டெல்லியில் நீட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிந்ததாக நினைக்கின்றனர். நீட் தேர்வை முற்றிலும் ஒழிப்பதற்கான தொடக்கம்தான் டெல்லியில் நடந்த போராட்டம்.

தலைவர் கலைஞர் அடிக்கடி கூறுவார், தந்தை பெரியாரை சந்திக்காமல் இருந்திருந்தால் கம்யூனிஸ்ட் வாதியாக ஆகியிருப்பேன் என கூறியிருந்தார்.

2016ல் திமுக குறைந்த வாக்கு விகிதத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அப்போது தலைவர் கலைஞரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழ்நாட்டு வரலாற்றில் முதல்முறையாக கம்யூனிஸ்ட் இல்லாத சட்டமன்றம் அமைந்துள்ளது என கலைஞர் வருத்தத்துடன் சொன்னார்.

கலைஞர் வழியில் எங்கள் தலைவர் ஸ்டாலினுக்கும் கம்யூனிஸ்டுகள் மீது தனி பாசம் கொண்டவர்.

ஐயா நல்லகண்ணுவுக்கு தமிழ்நாடு அரசின் மிக உயரிய விருதான தகைசால் விருதை வழங்கி பெருமைப்படுத்தியவர் எங்கள் தலைவர்.

பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் நல்லகண்ணு உடலுக்கு அப்போதைய நம் முதலமைச்சர் உணர்ச்சி பொங்க வீரவணக்கம் செலுத்திய காட்சியை யாரும் மறக்க முடியாது.

முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக நான் பொறுப்பேற்ற உடன் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றேன். நல்லகண்ணு அய்யா மறைந்த போது முழு அரசு மரியாதை வழங்கியவர் எங்கள் தலைவர் என்று பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version