வால்பாறை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வால்பாறை தனித்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அமுல் கந்தசாமி. அதிமுக மீதும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும் மிகுந்த பற்று கொண்டவர்.
அதிமுகவில் ஓபிஎஸ் தலைமையில் ஒருசிலர் இபிஎஸ்-க்கு எதிராக நின்றபோது, அமுல் கந்தசாமி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டார். சட்டமன்றத்தில் ஒவ்வொரு முறையும் பேசத் தொடங்கும்போது வாழும் வழிகாட்டியே என்று இபிஎஸ்-ஐ குறிப்பிட்டு பேசுவது இவரது வழக்கம்.
தொகுதி மக்களுடன் இரண்டற கலந்து பழகும் குணம், உதவும் உள்ளம் என்று நல்ல பெயரை பெற்றிருந்தார் அமுல் கந்தசாமி.
சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமியின் உயிர் பிரிந்தது.