அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தியாகராயநகரில் கடந்த 2023ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான பால வெங்கட சுப்பிரமணியன் என்ற ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் புகாரளித்தார்.

இதனடிப்படையில் மணியன் மீது, வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், கைது செய்த நிலையில் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக்கோரி ஆர்.பி.வி.எஸ். மணியன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன் குற்றச்சாட்டு பதிவுக்காக ஜூலை 21ம் தேதி ஆர்.பி.வி.எஸ். மணியன் ஆஜராக உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version