தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைச்சரவையின் முழுமையான விரிவாக்கம் நிறைவடைந்துள்ள நிலையில், அதிமுகவின் மிக முக்கிய அரசியல் தளமாக விளங்கும் கொங்கு மண்டலத்திற்கு முதலமைச்சர் விஜய் அசுர பல பிரதிநிதித்துவத்தை அள்ளிக் கொடுத்துள்ளார். மொத்தமுள்ள அமைச்சரவையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே 9 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தக் கோட்டையாகக் கருதப்படும் கொங்குப் பகுதியில், அக்கட்சியின் செல்வாக்கை முழுமையாகக் கட்டுப்படுத்த தவெக இந்த மெகா வியூகத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
யார் அந்த 9 கொங்கு அமைச்சர்கள்: கொங்கு மண்டலத்தின் அனைத்து முக்கிய மாவட்டங்களையும் உள்ளடக்கி, சீனியர்கள் மற்றும் இளம் முகங்களின் கலவையாக இந்த அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கே.ஏ. செங்கோட்டையன் (கோபிசெட்டிபாளையம்) – வருவாய்த் துறை அமைச்சர்
அருண்ராஜ் (திருச்செங்கோடு) – சுகாதாரத்துறை அமைச்சர்
கமலி (அவினாசி) – கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
விஜயலட்சுமி (குமாரபாளையம்) – பால்வளத்துறை அமைச்சர்
விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு) – கைத்தறித்துறை
லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்) – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை
தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு) – போக்குவரத்துத் துறை அமைச்சர் (மோட்டார் வாகனச் சட்டங்கள் நிர்வாகம், போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து).
சம்பத் குமார் (கோவை வடக்கு) – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
விக்னேஷ் (கிணத்துக்கடவு) – மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை
ஈபிஎஸ் கோட்டையைக் குறிவைக்கும் விஜய்:
கடந்த காலத் தேர்தல்களில் கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவிற்கே சாதகமான முடிவுகளைக் கொடுத்து வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பலமே இந்த மண்டலம் தான் என்பதால், அந்த அடித்தளத்தை பலவீனப்படுத்த தவெக திட்டமிட்டுள்ளது.
அதற்கேற்ப, அதிமுகவிலிருந்து விலகி வந்த சீனியர் தலைவர் செங்கோட்டையன், முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகனை வீழ்த்திய இளம் புயல் கமலி எனப் பலதரப்பட்ட முக்கிய முகங்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
9 அமைச்சர்களை ஒரே மண்டலத்திற்கு ஒதுக்கியதன் மூலம், கொங்கு மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள் கொங்குப் பகுதியை தவெக-வின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முதலமைச்சர் விஜய் அடித்தளமிட்டுள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
