தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு, ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் முக்கியத் தலைவராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உருவெடுத்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் சென்னையின் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் களம் காண்கிறார். 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.
பின்னர் காங்கேயம் தொகுதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பர்கூர் எம்.எல்.ஏ-வாகத் தொடர்ந்தார். அதே பாணியைப் பின்பற்றும் விஜய், ஏதேனும் ஒரு தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டாலும் மற்றொன்றின் மூலம் பேரவைக்குள் நுழைவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி என்பது கடந்த காலங்களில் திமுக மற்றும் இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக 9 முறையும், சிபிஎம் 3 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021 தேர்தலில் திமுகவின் ஆர்.டி.சேகர், அதிமுகவின் என்.ஆர்.தனபாலனை 54,976 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.
2026-லும் இதே தொகுதியில் ஆர்.டி.சேகர் மீண்டும் திமுக சார்பில் களம் இறங்குவதால், அங்கு விஜய்க்கும் திமுகவுக்கும் இடையே ஒரு பலப்பரீட்சையே நடக்கவுள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளரும் களம் காண்பதால், பெரம்பூரில் வாக்குகள் பிரியும் சூழல் நிலவுகிறது.
மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கு, 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவானது. குறுகிய கால வரலாற்றைக் கொண்ட இத்தொகுதி இதுவரை மூன்று தேர்தல்களைச் சந்தித்துள்ளது. 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அதிமுகவின் ஆர்.மனோகரன் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் முறையே வெற்றி பெற்றனர்.
ஆனால் 2021 தேர்தலில் திமுகவின் இனிகோ இருதயராஜ், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொகுதியை திமுக பக்கம் திருப்பினார். இத்தொகுதியில் 4-வது சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ‘விசில்’ சின்னத்தில் களம் காணும் விஜய், திமுகவின் பலமான வாக்கு வங்கியைத் தகர்த்து வெற்றி பெறுவாரா என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
