தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் முதலமைச்சரே விசில் சின்னத்துக்குதான் வாக்களிப்பார் என்று, கற்பனைக்கு எட்டாத அளவிற்கு விஜய் பேசிவருவதாக செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் என்னும் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை கலந்து கொண்டு குன்றத்தூர் ஒன்றியத்தில் 1654 கல்லூரி மாணவர்களுக்கும் ஸ்ரீபெரும்புதூரில் 300 கல்லூரி மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிதைக்க நினைக்கின்ற மோடி அரசை கண்டித்து நாளை தாம்பரம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடத்தப் போவதாகவும் இந்த பேரணியில் தெலுங்கானா துணை முதலமைச்சர் விக்ரம் சிங் பட்டி அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறினார்.
அகமதாபாத்தில் இருந்து மும்பை, குஜராத்தில் இருந்து மும்பை வரை புல்லட் ட்ரெயின் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது எந்த ஒரு முன்னெடுப்பும் இல்லை. ஒன்றிய பாஜக அரசால் தமிழகத்தில் எந்தவித மாற்றமும் வரப்போவதில்லை, இருக்கின்ற ஆட்சி தொடர போகிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக தொடர்வார்.
தமிழ்நாட்டிற்கு நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிய பாஜக அரசை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காக முழுவதுமாக தமிழ்நாட்டை நிராகரித்தார்கள் இதுதான் எதார்த்தம்
ஒன்றிய அரசு மோடி அரசு தமிழ்நாட்டை பன்னிரண்டு ஆண்டுகளாக வஞ்சித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டை புறம் தள்ளி இருக்கிறது. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மறக்கிறார்கள் ஆகவே தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையை பாதுகாக்கவும் மோடி அரசுக்கும் பாஜக கட்சிக்கும் தொங்கு சதையாக இருக்கின்ற அதிமுக உட்பட ஒரு சில கட்சிகளுக்கு பாடம் புகட்டுவார்கள்.
முதல்வர் மு க ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருந்தபோது எழுப்பி கேட்டால் விசில் சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று விஜய் கூறியதை கேள்வி கேட்டபோது, அதற்கு பதில் அளித்து செல்வப் பெருந்தகை கற்பனைக்கு எட்டாத அளவிற்கு பேசினால் நாம் என்ன சொல்வது என்று சிரித்தபடியே பதில் அளித்தார்.
