தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வெற்றி பெற்ற தனது கட்சி வேட்பாளர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வெற்றிச் சான்றிதழுடன் அனைத்து எம்.எல்.ஏ-க்களும் இன்று மதியத்திற்குள் சென்னை வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, குதிரை பேரம் மற்றும் தேவையற்ற அரசியல் நகர்வுகளைத் தவிர்க்கும் வகையில், தவெக எம்.எல்.ஏ-க்களை மாமல்லபுரத்தில் உள்ள ‘Four Points by Sheraton’ ரிசார்ட்டில் பாதுகாப்பாகத் தங்க வைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திடீர் முகாமுக்கு இடையே, அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் விஜய் நேரில் சந்தித்து அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாகப் பேச உள்ளார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், கூட்டணி ஆதரவு கோருதல் மற்றும் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது போன்ற முக்கிய முடிவுகள் இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக இருந்து வந்த இருமுனைப் போட்டியை உடைத்து, புதிய சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்யின் இந்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
மேலும் இந்த கூட்டத்தில், விஜய் சட்டசபை தவெக குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும், இதற்கான கடிதத்தில் தவெக வேட்பாளர்கள் கையெழுத்திடவுள்ளதாகவும் கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து தவெக சார்பில் யார் யார் அமைச்சர்களாக தேர்ந்தெடுப்பது என்பது குறித்த பட்டியலும் தயாரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
