தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதற்கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் இதயத் துடிப்பில் சில வேறுபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அரசு மற்றும் கட்சிப் பணிகளிலும், வெளி மாவட்ட பயணங்கள், ஆய்வுக் கூட்டங்கள், புதிய திட்டங்கள் தொடங்குதல், நலத் திட்ட உதவிகள் வழங்குதல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக இயங்கி வந்தார். அத்துடன், தேர்தல் பணிகளையும் கவனித்து வந்ததால், கடந்த மூன்று மாதங்களாக அவருக்குக் கடும் வேலைப் பளு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 19ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்து காலமானார். அன்று நாள் முழுவதும் மு.க.முத்துவின் உடல் அருகிலேயே இருந்த முதல்வர், சாப்பிடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 21ஆம் தேதி காலை வழக்கம்போல நடைபயிற்சி மேற்கொண்டபோது, திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால் பாதியிலேயே அதை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். பின்னர் வழக்கமான பணிகளை மேற்கொண்டபோதிலும், மீண்டும் தலைசுற்றல் ஏற்பட்டதால் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதற்கட்ட பரிசோதனைக்குப் பிறகு, கூடுதல் பரிசோதனைகளுக்காக ஆயிரம் விளக்கு அப்பல்லோவில் இருந்து தேனாம்பேட்டை அப்பல்லோவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் இருந்தபடியே முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தொடர்பான பணிகளை மேற்பார்வையிட்டு வந்தார்.
பிரமுகர்கள் நலம் விசாரிப்பு:
முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தனர். மேலும், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று உதயநிதியைச் சந்தித்து ஸ்டாலின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை:
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதயத் துடிப்பில் சில வேறுபாடுகள் இருந்ததன் காரணமாகவே தலைசுற்றல் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கான சிகிச்சை முறை இன்று (ஜூலை 22 அன்று) காலை அப்பல்லோ மருத்துவமனையில் செய்யப்பட்டது. அன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் இயல்பாகவே இருந்தது. மு.க.ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் என்றும் தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார் என்றும் தெரிவித்தது.
விஜய் வாழ்த்து:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்.
— TVK Vijay (@TVKVijayHQ) July 24, 2025
இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நடிகர் விஜய், திமுகவை தனது அரசியல் எதிரி என்று அறிவித்து, திமுக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.