விருதுநகர் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நடக்கும் விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இரு குழுக்களை அமைத்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023 ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் உள்ள, கங்கர்செவல் கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகினர்.

இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இந்த விவகாரத்தை தாமாக முன் வழக்கு விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யா நாராயாணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வானது , விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்ந்து தொழிலாளர்கள் பலியாவது மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.

பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆலைகள் செயல்படுவதற்கான பாதுகாப்பு விதிகள் குறித்து அறிந்திருக்கவில்லை என்பதையே விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து காட்டுகிறது என தெரிவித்த தீர்ப்பாய உறுப்பினர்கள், வெடிபொருட்களின் துணைத் தலைமைக் கட்டுப்பாட்டாளர் தாக்கல் செய்த அறிக்கையில் கூட பட்டாசு ஆலைகளின் அளவுகதிகமாக வெடிப்பொருட்களை சேமித்து வைத்திருந்தது, அனுமதி பெறாமல் ஆலைகள் செயல்பட்டது, பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பட்டாசுப் பொருட்களை உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் தான் பட்டாசு ஆலை வெடி விபத்திற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி அளிக்கும் முன் அனைத்து உரிமங்களும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்த பின்னரே ஆலை செயல்படுவதற்கான தடையில்லா சான்று இனி வழங்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதேனும் விதி மீறல்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியப்பட்டால் அந்த பட்டாசு. ஆலைகளை மூடுவது உட்பட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்படுவதாக பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு ஆலைகள் முறையாக உரிமம் பெற்றுள்ளதா, பாதுகாப்பு விதிகள் முறையாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வெடிபொருட்களின் தலைமை கட்டுப்பாட்டாளரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் PESO தலைமையில் ஒரு குழுவும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஒரு குழுவும் அமைத்தும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுக்கள் விருதுநகரில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் தனித்தனியாக ஆய்வு செய்து 10 நாட்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, பட்டாசு ஆலை பணி புரியும் தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் தொகையை பட்டாசு தொழிற்சாலைகள் கட்டாயம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version