தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சுற்று முடிவில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது முன்னிலையில் இருந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் சுற்று எண்ணிக்கையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பாபு முன்னிலை பெற்றுள்ளார். தற்போதைய நிலவரப்படி, தவெக வேட்பாளர் 886 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சரை விடக் கூடுதல் வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
முதலமைச்சரின் சொந்தத் தொகுதியாகவும், திமுகவின் கோட்டையாகவும் கருதப்படும் கொளத்தூரிலேயே ஆளும் கட்சித் தலைவர் பின்னடைவைச் சந்தித்திருப்பது அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் கண்ட முதல் தேர்தலிலேயே, ஆளுங்கட்சியின் மிக முக்கியத் தலைவர்களுக்கு எதிராக இவ்வளவு பெரிய சவாலை எழுப்பி வருவது வாக்கு எண்ணிக்கை மையங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
