ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்து, அண்மையில் அக்கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மேடையில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வாக்களிப்பது செல்லாத வாக்காக (நோட்டா) மாறிவிடும் என விமர்சித்துக் கொண்டிருந்தார். ஆனால், பேச்சின் உச்சக்கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட செங்கோட்டையன், “தமிழக வெற்றிக் கழக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்” என்று கூறி அதிர்ச்சியளித்தார். நீண்ட காலம் அதிமுகவில் இருந்த பழக்கத்தினால் அவர் வாய் தவறி பழைய சின்னத்தைக் குறிப்பிட்டது அங்கிருந்த தவெக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தனது தவறை உடனே உணர்ந்த செங்கோட்டையன், சாமர்த்தியமாகப் பேசிச் சூழலைச் சமாளித்தார். “ஐம்பது ஆண்டுகாலமாக இரட்டை இலை சின்னத்தைக் கேட்டே எனக்குப் பழகிவிட்டது” என்று குறிப்பிட்ட அவர், கோபிசெட்டிபாளையத்தில் தான் வாக்கு சேகரித்தபோது ஒரு மூதாட்டி தன்னிடம் ‘உங்களுக்குத் தானே எப்போதுமே வாக்களிப்போம், இரட்டை இலை தானே?’ எனக் கேட்ட சுவாரசியமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்தப் பாட்டியிடமே தான் தற்போது ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடுவதைச் சுட்டிக்காட்டி வாக்கு கேட்டதாகக் கூறி, அங்கிருந்த மக்களைச் சிரிக்க வைத்தார். இறுதியில், தவெக வேட்பாளரின் ‘விசில்’ சின்னத்திற்கு ஆதரவு கேட்டு தனது உரையை முடித்தார்.
