தமிழக அரசியலில் கூட்டணிக் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக தலைமையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தொண்டர்கள் அதிமுகவில் இணையத் தொடங்கியுள்ளனர். தேமுதிகவினர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் அதிமுகவில் இணைவார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அவர் கூறியது போலவே, தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக இந்த இடமாற்றம் நிகழ்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேமுதிக மற்றும் இதர கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அக்கட்சியிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். நன்னிலத்தில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான ஆர். காமராஜ் முன்னிலையில் அனைவரும் கட்சி வேட்டியை அணிந்து கொண்டு தங்களை முறைப்படி இணைத்துக் கொண்டனர். ராஜேந்திர பாலாஜி ஆரூடம் சொன்ன மூன்றே நாட்களில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் தொண்டர்கள் வெளியேறியது தேமுதிக தலைமைக்கு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளது.
தேமுதிகவின் கோட்டையாகக் கருதப்படும் பல பகுதிகளில் இருந்தும் நிர்வாகிகள் வெளியேறுவது, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. “விஜயகாந்த் வழியில் அதிமுகவுடன் கைகோர்ப்பதே சரியாக இருக்கும் என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள், ஆனால் தலைமை எடுத்த முடிவு எங்களை ஏமாற்றிவிட்டது” என விலகிய நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது. தஞ்சாவூரைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் இதே போன்ற மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
