அரசுப் போக்குவரத்து கழகங்களில் தவிர்க்கப்பட்ட ‘தமிழ்நாடு’ பெயர் காக்க நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், ‘தமிழ்நாடு’ பெயர் அழிக்கப்பட்டு வெறுமனே அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப காலங்களில் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்றே அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக அரசு தமிழ்நாடு பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுத்த பிறகும் திமுக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்று பெயரைச் சேர்க்க மறுத்து அமைதி காப்பது ஏன்? என்று சீமான் தெரிவித்தள்ளார்.  இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? அல்லது முதலமைச்சர் பொறுப்பேற்பாரா? என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுதான் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? என்றும் இதுதான் திமுக அரசு தமிழ்நாடு மண், மொழி, மானம் காக்கும் முறையா? என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு என்ற பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்பதற்காகவே பெருந்தமிழர் சங்கரலிங்கனார் 76 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி தன்னுடைய இன்னுயிர் ஈந்ததாக சீமான் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகா, கேரளா, தெலுங்கானா புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் அனைத்தும் தங்கள் மாநிலப் பெயரை பெருமையோடு பேருந்துகளில் எழுதியிருக்க, திமுக அரசுக்கு மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் அவமானமாக இருக்கிறதா? என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் பழையபடி தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் அனைத்திலும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்று முழுமையாக எழுத வேண்டுமென்று அவர் வலியுறுத்தி உள்ளார்.  இல்லையென்றால், ‘தமிழ்நாடு’ பெயர் காக்க நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version