கோயம்புத்தூர், 41-வது வார்டு P.N.புதூர் மும்மநாயக்கர் வீதி விரிவாக்கப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக குழந்தைகள் விளையாடும் இடங்களில் காட்டுப்பன்றிகள் வருவதால், விபரீதங்கள் நிகழும் முன் தமிழக அரசும், வனத்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடுகளுக்குள் நுழையும் பன்றிகள்:
நேற்று (மே 28, 2025) மாலை, ஒரு காம்பவுண்டுடன் கூடிய வீட்டிற்குள் நான்கு குட்டிகளுடன் ஒரு காட்டுப்பன்றி நுழைந்துள்ளது. பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் வந்து சேர்வதற்குள் பன்றி மாயமாகி விட்டது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாடவே அஞ்சுகின்றனர்.
மக்களின் கோரிக்கை:
காட்டுப்பன்றிகள் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்தால், வனத்துறையினர் அவ்வப்போது வந்து பார்வையிடுகின்றனர். இருப்பினும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதிக மக்கள் வசிக்கும் மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் வருவதால், பெரும் விளைவுகள் ஏற்படும் முன் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.