திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகவுள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் வேல்முருகன் கலந்துகொள்ளாதது பேசுப்பொருளாகியுள்ளது,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ-வுமான வேல்முருகன், திமுகவுடன் 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். கூட்டணியில் இருந்தபோதும் சாதிவாரி கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு, தொகுதி மேம்பாட்டு நிதி, தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் போன்ற விவகாரங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் வேல்முருகனின் பேச்சுகளை கண்டித்துள்ளனர்.
பாமகவில் இருந்து விலகி தவாகவை தொடங்கிய வேல்முருகன் தமிழ் தேசியவாதம், வன்னியர் உரிமைகள், ஈழத் தமிழர் ஆதரவு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். திமுக கூட்டணியில் இருந்தாலும், தனது கோரிக்கைகளுக்கு அழுத்தம் தருவதன் மூலம் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார். வேல்முருகனை “ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ-வாக இருந்தும் திமுக அரசைத் தாக்குவது தவறு” எனக் கூறுகிறது அறிவாலயம்.
ஏற்கனவே, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில், மூன்று முறை பண்ருட்டி தொகுதியில் இருந்து எம்.எல்,ஏ-வான தவாக தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் வேல்முருகன் கலந்துகொள்ளாதது பேசுப்பொருளாகியுள்ளது. அண்மை காலமாக கூட்டணி நிலைப்பாட்டில் தனது கருத்தை மாற்றிய வேல்முருகன், கடந்த 3 நாட்களாக மாவட்ட செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் பெரும்பாலானோர் திமுக கூட்டணியை விரும்பவில்லையாம். இதனிடையே தவாகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக அணுகிறதாம்.
