ன்லைன் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட கட்டணத்தை விட இரு மடங்கு பணம் கேட்டு, மறுத்த குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படும் ஓலா ஆட்டோ ஓட்டுநரை, கைக்குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர் நடுரோட்டில் தைரியமாகத் தட்டிக்கேட்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் இருந்து பூசாரிபாளையம் செல்ல குடும்பத்தினர் ஓலா செயலி மூலம் ஆட்டோவை முன்பதிவு செய்திருந்தனர். முதலில் சவாரியை ஏற்றுக்கொண்ட ஓட்டுநர் பின்னர் அதை ரத்து செய்ததாகவும், அதன்பின் மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் வந்து தங்களை அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

சிறிது தூரம் சென்ற பிறகு, ஆப்பில் காட்டியிருந்த ரூ.150 கட்டணத்திற்கு பதிலாக ரூ.300 வழங்க வேண்டும் என்று ஓட்டுநர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, அந்தப் பெண்ணின் கணவரை ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கண்டு ஆவேசமடைந்த அந்தப் பெண், கையில் குழந்தையுடன் இருந்தபடியே ஆட்டோவை வழிமறித்து, “ஆப்பில் காட்டுற தொகையை விட ஏன் கூடுதல் கட்டணம் கேட்கிறீர்கள்? என் கணவரை எப்படி தாக்கலாம்?” என்று கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திய நிலையில், ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து விரைந்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், கோவையில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட ஆன்லைன் ஆட்டோ சேவைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பயணிகளுடன் தகராறு செய்வது போன்ற புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு போக்குவரத்து போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் (RTO) உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version