உலகெங்கும் வாழும் தமிழர்களால் சித்திரை முதல் நாள் புத்தாண்டு திருநாளாக வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என எல்லைகள் கடந்து தமிழர்கள் இந்நாளைத் தங்கள் பண்பாட்டு அடையாளமாகப் போற்றுகின்றனர். வானியல் ரீதியாக, சூரிய பகவான் பன்னிரு ராசிகளையும் சுற்றி வந்து, மீண்டும் தனது பயணத்தை முதல் ராசியான மேஷத்தில் தொடங்கும் தினமே தமிழ் புத்தாண்டாகக் கருதப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ‘குரோதி’ வருடம் நிறைவு பெற்று, நாளை( ஏப்ரல் 14-ம் தேதி ‘விசுவாவசு’ புத்தாண்டு பிறக்கிறது.

புத்தாண்டு வழிபாட்டின் மிக முக்கிய அங்கமாக ‘கனி காணுதல்’ அமைகிறது. இதற்காக இன்று (ஏப்ரல் 13-ம் தேதி) இரவே வீட்டைத் தூய்மை செய்து, ஒரு தாம்பாளத்தில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை, மங்கலப் பொருட்கள், தங்கம் மற்றும் நாணயங்களைச் சேகரித்து வைக்க வேண்டும். இதன் நடுவே ஒரு கண்ணாடியை வைத்து, மறுநாள் நாளை ஏப்ரல் 14 அதிகாலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட்களையும் நம் முகத்தையும் கண்ணாடியில் காண்பது, அந்த ஆண்டு முழுவதும் செல்வச் செழிப்பையும் நேர்மறை ஆற்றலையும் தரும் என்பது ஐதீகம்.

வழிபாட்டிற்குப் பிறகு, குளித்து முடித்துவிட்டு இறைவனுக்குச் சர்க்கரைப் பொங்கல் மற்றும் இனிப்புகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்குவதுடன், அன்றைய உணவில் அறுசுவைகளும் இடம்பெறுவது அவசியம். குறிப்பாக, வாழ்வில் இன்ப துன்பங்கள் இரண்டையும் சமமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் வேப்பம்பூ ரசம் (கசப்பு) மற்றும் மாங்காய் பச்சடி (இனிப்பு, புளிப்பு) ஆகியவை கண்டிப்பாகச் சமைக்கப்பட வேண்டும். வடை, பாயாசத்துடன் இறைவனுக்குப் படைத்து குடும்பத்துடன் உண்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

பிறக்கவிருக்கும் விசுவாவசு ஆண்டு சூரிய பகவானின் ஆதிக்கம் நிறைந்த ஆண்டாகும். சூரியன் ஆரோக்கியம், அதிகாரம் மற்றும் செல்வத்திற்கு அதிபதி என்பதால், இந்த ஆண்டு முழுவதும் வெற்றிகள் குவியச் சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபடுவது சிறந்தது. தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதும், சிவ மந்திரங்களை உச்சரிப்பதும் தடைகளை நீக்கி வாழ்வைச் செம்மைப்படுத்தும். மேலும், புத்தாண்டு தினத்தன்று இயலாதவர்களுக்குத் தானம் செய்வது புண்ணிய பலன்களைப் பலமடங்காகப் பெருக்கும்.

வாழ்க்கையில் இயற்கை தரும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, இந்த விசுவாவசு ஆண்டில் அனைத்து நன்மைகளும் கிடைக்க வேண்டும் என மனதார வேண்டிக்கொள்வோம். சித்திரை முதல் நாள் நாம் செய்யும் இந்தச் சிறு ஆன்மீக முயற்சிகள், நம் குடும்பத்தில் அமைதியையும், தொழில் மற்றும் கல்வியில் வெற்றியையும் தேடித்தரும். இந்த இனிய நன்னாளில் பாரம்பரிய முறையிலான வழிபாடுகளை மேற்கொண்டு, வளமான வாழ்வைப் பெற இறைவனைப் பிரார்த்திப்போம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version