கோவை மாவட்டம் காந்திபுரத்தில் சாலையோரத்தில் இருந்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்த இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் முன்பாக நேற்று(20.05.2025) இரவு சுமார் 65 வயது முதியவர் உணவருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் இரண்டு பேர், திடீரென முதியவரை கடுமையாக தாக்க தொடங்கியுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிலர், இளைஞர்களை தடுக்க முயற்சித்தனர்.
அதனை கண்டுகொள்ளாமல் இளைஞர்கள் அந்த முதியவரை கற்களாலும், கையாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் சிலர் இணைந்து துணிச்சலுடன் இளைஞர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி தர்ம அடி கொடுத்தனர்.
அதே வேளையில் முதியவர் ரத்தம் சொட்ட சொட்ட அப்பகுதியில் ஓரமாக அமர வைக்கப்பட்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் இளைஞர்கள் இருவர் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு இளைஞர்களும் நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியைச் சேர்ந்த திவாகரன் மற்றும் விஜய் என்பது தெரியவந்தது. கோவை காந்திபுரம் பகுதியில் அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி வரும் இருவரும், கிடைக்கும் வேலைகளுக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு மது அருந்துவதும் அவ்வப்போது இது போன்ற தகராறுகளில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
இதே போல் தாக்குதலுக்கு உள்ளான முதியவர் வேலூரைச் சேர்ந்த ராமசாமி என்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து காயமடைந்த முதியவரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அதீத போதையில் இருந்த இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.