சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. பகல் நேரங்களில் தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருவதால், சென்னைவாசிகள் செய்வதறியாது திகைத்து வந்தனர். குறிப்பாக காலை 10 மணி முதலே வெயில் அசுர தாண்டவம் ஆடியது. இந்த நிலையில், தற்போது சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, அசோக்நகர், கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
அதேநேரம் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், இரவிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அப்டேட் கொடுத்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், இரவிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் மேலும் பல பகுதிகளிலும் மழை தொடரும் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.