ஐபிஎல் தொடரில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 39வது ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் களமிறங்கிய டெல்லி அணி பெங்களூரு அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. 16.3 ஓவர்களில் டெல்லி அணி 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் முதல் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் வந்த மில்லர் மற்றும் அபிஷேக் ஆகியோர் இணைந்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர்.
பெங்களூரு அணி தரப்பில் ஜோஷ் 3.3 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். புவனேஷ்குமார் 3 ஓவர்களில் 5 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ராசிக், சூயாஷ் ஷர்மா மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து, 76 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 6.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாச வெற்றி பெற்றது. தேவ்தத் படிக்கல் 34 ரன்களும், கோலி 23 ரன்களும், ஜேக்கப் பெத்தல் 20 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடி உள்ள பெங்களூரு அணி 6 வெற்றிகளை பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
