நீண்ட காலமாக சிறையில் வாடிவரும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
கோவை மாவட்டம் கெம்பனூர் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படாதது நீண்டகாலமாக மக்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. இது நவீன தீண்டாமையின் ஒரு வடிவமாக கருதப்படுவதால், அதுகுறித்து அரசு ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாணவர்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் பெறப்பட்டதாகவும், அவற்றை நிறைவேற்றுவதற்கும், கடந்தகால பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலும் அந்த ஆய்வு நடைபெற்றதாகவும் கூறினார்.
காந்திபுரம் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பது தொடர்பாக கோவை பொறுப்பு அமைச்சர் சம்பத்குமாருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், தகுதியுடையவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
மாநிலத்தில் எங்காவது இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
பழங்குடியின மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், “அண்ணன் வைகோவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதும் நேசிக்கும். அவர் எவ்வித விமர்சனங்களை முன்வைத்தாலும், எங்களின் மரியாதையும் நேசமும் அவர்மீது தொடரும்” என்று அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.
