திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் முன்னாள் ராணுவ வீரரை போலீசார் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி அருகே அர்ஜுனாபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துருகம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ்பாபு மற்றும் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வரும் பிரபாகரன் ஆகியோர் நடனமாடியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீசாருக்கும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தலைமை காவலர் சபரி, சிறப்பு உதவி ஆய்வாளர் திருமால் உள்ளிட்ட போலீசார் ரமேஷ்பாபுவை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறையினரை தாக்கியதாக தலைமை காவலர் சபரி அளித்த புகாரின் பேரில், ரமேஷ்பாபு மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், போலீசார் முன்னாள் ராணுவ வீரரை தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சம்பவம் நடந்த 10 நாட்களுக்குப் பிறகு வெளியான இந்த காட்சிகள் குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் போலீசார் தாக்கிவிட்டு, அவர்கள் மீதே வழக்குப் பதிவு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினரும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
