வியட்நாமில் நடைபெற்ற படகு விபத்தில் 15 பேர் இறந்த நிலையில் அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளவர். அவர்களில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளது அந்தப் பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்ட, திருவானைக்காவல் கீழகொண்டயம்பேட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அரியமங்கலம் பகுதியில் செயல்பட்டு வந்த செல்மோர் என்ற மொபைல் போன் மொத்த விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
சமீபத்தில் லாவா மொபைல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இன்பச் சுற்றுலாவில் வியட்நாமிற்கு கடந்த 8ம் தேதி இரவு புறப்பட்டு சென்றார். அங்கு நடந்த படகு விபத்தில் அகால மரணம் அடைந்தார். பாலாஜிக்கு விஷ்ணு பிரியா என்ற மனைவி மற்றும் ரமேஷ்(13) ஜித்து(10) என்கிறஇரு மகன்களும் உள்ளனர். இளம் வயதில் படகு விபத்தில் பாலாஜி உயிரிழந்த தகவல் அறிந்த அந்தப் பகுதி பொதுமக்களும் குடும்பத்தாரும் ஆழ்ந்த வேதனையில் உள்ளனர்.
இதேபோல் திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்த ஷேக்அப்துல்லா, திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகுராஜன் ஆகியோரும் வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
வியட்நாமில் உயிரிழந்துள்ள மூவரின் உடல்களையும் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அதேபோல மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் உறவினர்களிடம் பேசி விரைந்து உடலை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
செவ்வாய் அல்லது புதன்கிழமை உடல் கொண்டு வருவது படும் என எதிர்பார்க்கப்படுவதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
