சினிமா துறையில் போதைப் பொருள் பழக்கமும், புழக்கமும் அதிகளவில் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. சினிமாவில் உள்ள சிலரே இது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அப்படியிருக்க, நடிகர் ஸ்ரீகாந்த் போதை வழக்கில் கைதாகி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வரவேண்டும் என்ற முனைப்பில் இருந்தவர் ஸ்ரீகாந்த். 2000-களின் முற்பாதியில் ஹீரோவாக வலம் வந்தவர், பின்னாளில் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இவரது நடிப்பில் வெளியான தினசரி என்ற படத்திற்காக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். இப்படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகியுமான சிந்தியாவால் கேலி, கிண்டலுக்கு உள்ளானார் ஸ்ரீகாந்த்.
தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் வெப் சீரிஸ், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில், அதிமுக வழக்கறிஞர் பிரசாந்த் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் இருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் ஸ்ரீகாந்திடம் விசரணை மேற்கொண்டனர். மேலும் ஸ்ரீகாந்திற்கு சம்மன் கொடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தினர். பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவரவே, நுங்கம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கானா நாட்டை சேர்ந்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.