தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா, தன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார்.
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார். சேர்ந்த உடனேயே தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. தவெகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கை அவர்தான் ஒருங்கிணைத்தார். மேலும் தவெக தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பையும் அவர் நடத்தி வந்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் இயங்கி வருகிறது. அங்கு கடந்த 10-ந் தேதி ஆட்டோ மற்றும் கார் ஒன்றில் வந்த மர்மநபர்கள் அலுவலகத்தை நோட்டம் விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களில் ஒருசிலர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதாகவும் தெரிகிறது. வந்தவர்களின் கைகளில் உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்கள் இருந்ததாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு தரவேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.