ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் இன்று, சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐதீகப்படி, ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு கிருத்திகை தினங்கள் வரும் நிலையில், இன்று மிகவும் விசேஷமான நாளாகக் கருதப்படுகிறது.
கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கே நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் ஆலயப் பிரகாரம் முழுவதும் நிரம்பி வழிந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
