திருவள்ளூரில் உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததால் அந்த பகுதியே கலேபரமானது.
சென்னை துறைமுகம், அனல்மின் நிலையம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீஞ்சூர் அருகே காட்டுப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். அங்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவே கங்கா காவேரி என்ற பெயரில் குடியிருப்பு உள்ளது. இந்த நிலையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அமரேஷ் என்பவர் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வசித்து வந்த நிலையில், குடியிருப்பில் மாடி ஏறும்போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
தகவலறிந்து அங்கு சென்ற காட்டூர் போலீசார், இறந்த அமரேஷ் உடலை கைப்பற்றி சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி குடியிருப்பு வளாகத்தில் குவிந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுப்பட்ட சிலர் போலீசார் மீது கற்களை வீச தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதை பார்த்த அப்பகுதியினர், மேலும் கற்களை எடுத்து வீச தொடங்கியதால் போலீசார் லத்தியை கையிலெடுத்தனர். அடுத்த சில நொடிகளில் அந்த இடத்தில் வன்முறை வெடித்ததால், நிலமையை கட்டுப்படுத்த போலீசார் லத்தியால் தடியடி நடத்தினர். இதில் போலீசாரின் வேன் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் அந்த இடமே கலேபரமானது.