ஓணம் பண்டிகையை ஒட்டி விமான கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளனர். ரயில்களில் முன்பதிவு முடிந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகரித்து காணப்படுகிறது.
ஆகையால் பெரும்பாலான மக்கள் விமான சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், விமான கட்டணங்களும் அதிகரித்து வருகிறது. சென்னை-திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.4,359-ல் இருந்து ரூ.19,903ஆக அதிகரித்துள்ளது. சென்னை – கொச்சி இடையே விமான கட்டணம் ரூ.3,713ல் இருந்து ரூ.11,798ஆக அதிகரித்துள்ளது. அதைபோல சென்னை – கோழிக்கோடு இடையேயான விமான கட்டணம் ரூ.3,629ல் இருந்து ரூ.10,286ஆக உயர்ந்துள்ளது.