தமிழகத்தில் சட்டப்பேரவை கூடுதலை முன்னிட்டு சென்னை காவல்துறையினருக்கு காவல் ஆணையர் அருண் பல்வேறு முக்கிய அறிவுரைகளை சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பட்ஜெட் கூட்டத்தினருக்கு பிறகு, இந்த ஆண்டு இரண்டாவது முறையாக அக்டோபர் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவித்திருந்தார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பல்வேறு பரபரப்பான அரசியல் சூழ்நிலைகள் தற்போது நிலவி வருகின்றன. முக்கியமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் விபச்சாரக் கூட்டத்தின் போது 41 பேர் நெரிசலில் உயிரிழந்த விவகாரமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி சட்ட பேரவை கூடுகிற காரணத்தினால் சென்னை காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் வழக்கு விசாரணை கையாள்வது உள்ளிட்ட விவகாரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற அறிவுரைகளை சென்னை காவல்துறை ஆணையர் அருண் சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதில், “காவல் ஆய்வாளர் அனுமதி இன்றி காவல் நிலையத்தில் சந்தேக நபர்களை அடைத்து வைக்கக் கூடாது, விசாரணை கைதிகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், விசாரணையின் போது துன்புறுத்தல் கூடாது மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விரைந்து நீதிமன்ற காவலில் அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
தவிர, விசாரணையின் போது மது போதையிலும், காயத்திலும் இருக்கும் கைது செய்யப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பின்னே விசாரிக்கப்பட வேண்டும் எனவும், கடுமையான குற்றங்களில் இரவு நேரங்களில் கைது செய்யப்பட்டவர்கள் கவனமாக கண்காணித்து விசாரிக்கப்பட வேண்டும், வழக்கு பதிவு செய்யப்படாமல் கைதி அறையில் எந்த நபரையும் வைத்திருக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார். பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் நோய் வாய்பட்டவர்களை விசாரணைக்கு அழைக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
மேலும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அதில், “தலைமைச் செயலகத்திற்கு உள்ளே வருபவர்கள் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட வேண்டும். வளாகத்திற்குள் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க அனுமதி கிடையாது மற்றும் தலைமைச் செயலகம் சுற்றி சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டப்படாத வண்ணம் கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
குறிப்பாக முதல்வர் மற்றும் அமைச்சர் வாகனங்கள் செல்லும் பொழுது வழிமறித்து மனு அளிப்பதோ ஆர்ப்பாட்டங்கள் நடத்த அதை தடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறையினர் மீதான விமர்சனங்களை தவிர்க்கும் வகையில் விழிப்புடன் செயல்பட வேண்டும்” என சென்னை காவல்துறை ஆணையர் அருண் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.