கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உள்பட மொத்தம் 5 வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
முதலாவதாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு விசாரணைக்கு வருகிறது.
இரண்டாவது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாஜக வழக்கறிஞரும், மனுதாரருமான ஜி.எஸ்.மணி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வருகிறது. மனுவி, ‘இது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்த துயர சம்பவம். எனவே சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை, மாவட்ட நிர்வாக துறை, மின்சார துறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிந்து முறையான நீதி விசாரணை நடக்க சிபிஐ அல்லது பதவியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக கரூர் சம்பவத்தில் உயிரிழந்த சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ் சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வருகிறது.
நான்காவது, கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர் சி.பி.ஐ. விசாரணை கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது.
ஐந்தாவதாக, பிரபாகரன் என்பவர் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு சார்பில் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹத்கி, வில்சன், ரவீந்திரன் ஆகியோர் வாதாடுகின்றனர்.